மதுபானம் வாங்க 100 ரூபாய் தராத அம்மாவை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம், சிர்சோட் கிராமத்தைச் சேர்ந்தவர், சந்தோஷ் சென் (35). அவரது அம்மா கிரிஜா பாய் (75). குடிப்பழக்கம் கொண்ட சந்தோஷ், அம்மாவிடம் பணம் கேட்டு அடிக்கடி நச்சரிப்பார். தினமும் காலையிலேயே குடித்துவிடுவாராம். இந்நிலையில் நேற்று காலையில் 5 மணிக்கு எழுந்ததும் போதை தேடியது மனது. அம்மாவை உசுப்பி குடிக்க பணம் கேட்டார் சந்தோஷ். ’காலையிலயே குடிக்கணுமா, உனக்கு?’ என்று திட்டிய அம்மா பணம் தர மறுத்தார். வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபமான அந்த போதை மகன், கோடாரியால் அம்மாவை வெட்டிக்கொன்றான். பின்னர் கதவை பூட்டிவிட்டு ஒன்று தெரியாதவாறு வெளியே வந்தான். கிராமத்தினர், அவனை வழிமறித்து அம்மாவிடம் என்ன சத்தம் என்று கேட்டனர். அவன் உளறியதை அடுத்து வீட்டுக் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிரிஜா பாய் இறந்து கிடந்தார். இதையடுத்து அம்லோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசா விரைந்து வந்து சந்தோஷை கைது செய்தனர்.