போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்பது எப்படி? - சமூக வல்லுநர்கள் கருத்து

போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்பது எப்படி? - சமூக வல்லுநர்கள் கருத்து

போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்பது எப்படி? - சமூக வல்லுநர்கள் கருத்து
Published on

இந்தியாவில் போதைப்பழக்கத்திற்கு அதிகளவு இளைஞர்கள் அடிமையாவதற்கு என்ன காரணம்? அவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து வல்லுநர்கள் தெரிவிக்கும் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அமலுக்கு வந்தது. மருத்துவ பயன்பாடுகள் தவிர பிற போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. போதைப் பொருள் பயன்படுத்தினால் குறைந்த பட்சம் 6 மாதம் சிறை தண்டனை முதல், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வரை வழங்கப்படும். தண்டனைத் தவிர ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் இளைஞர்கள் அதிகளவு போதைப்பழக்கத்திற்கு ஆளாகி வருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் அபினும், வியட்நாம், மியான்மர், தாய்லாந்து நாடுகளில் ஹெராயினும் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து போதைப்பொருட்களை புழக்கத்தில் விடுவதற்கான எளிய சந்தையாக இந்தியா உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் கசகசாவை மூலப்பொருளாகக் கொண்டும் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து அதிகளவு கஞ்சாவும் அண்மைக் காலமாக கடத்தப்படுகிறது. இது போன்று எளிதில் போதைப்பொருட்கள் கிடைப்பதால் அதனைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து புதிய தலைமுறையின் நியூஸ் 360டிகிரியில் வல்லுநர்களின் கருத்துகளோடு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், “நான் 40 ஆண்டுகாலமாக மனநலத் துறையில் உள்ளேன். பல தரப்பட்ட மனநோயாளிகளை பார்த்து வருகிறேன். தன்னை மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தையும் சேர்த்து அழிக்கும். போதைப்பொருளை இளைஞர்கள், அவர்களாகவே தேடிப் போய் வாங்கி பயன்படுத்துவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. போதைப்பொருள் உடல், உணர்வு, உணர்ச்சி, சிந்தனைத் திறன் என ஒட்டுமொத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

போதைப்பொருளால் அடிமையானவர்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதையின் பிடியில் சிக்கியவர்களை உரிய சிகிச்சை மூலம் மீட்டெடுக்கலாம். போதைப்பொருள் உற்பத்தியாகும் இடத்தை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். அடுத்ததாக இதை விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசால் மட்டுமே இதை தீர்க்க முடியாது. இது ஒரு சமூக பிரச்னை என்று அனைவரும் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக தீர்த்து விட முடியும்” எனத் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வின்செண்ட் கூறுகையில், “குறைந்த அளவிலான போதைப்பொருள் வாங்கி வருபவர்களை சில நேரங்களில் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. தகவல் சொல்பவர்கள் சரியாக சொன்னால் கண்டிப்பாக பிடித்துவிடுவோம். பிடிபட்டவர்களுக்கு 6 மாதங்கள் கண்டிப்பாக ஜாமீன் கிடைக்காது. அதற்குள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வாங்கி கொடுக்க வழிவகை செய்துவிடுவோம். கோவை பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் 1300 கிலோ கஞ்சா மட்டுமே பிடிபட்டுள்ளது. சமீபத்தில் எல்.எஸ்.டி என்ற புதிய போதைப்பொருளை பிடித்துள்ளோம். போதைப்பொருளை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இது காவல்துறைக்கு சவாலான விஷயம்தான். போதைப்பொருள் வைத்திருந்தாலே கைதுதான். அதற்கான பதிலை நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில்தான் போதைப்பொருள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. இதன் பின் விளைவு கடுமையாக இருக்கும். அது அவர்களுக்கு தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

சட்டரீதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தனிமனித ஒழுக்கமும், பொறுப்புணர்வும் இருந்தால் மட்டுமே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com