சீர்காழி: இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் என்கவுண்டர்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

சீர்காழி: இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் என்கவுண்டர்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
சீர்காழி: இரட்டை கொலை, கொள்ளை வழக்கில் என்கவுண்டர்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

சீர்காழி இரட்டை கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளி ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக திருச்சி சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி பால்பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வாசிப்பவர் தன்ராஜ் சவுத்ரி (50) இவரது மனைவி ஆஷா (45) மகன் அகில் (24) மருமகள் நிகில் (21) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். தன்ராஜ் சவுத்ரி சீர்காழி அருகே உள்ள தருமகுளம் கிராமத்தில் நகைக் கடை மற்றும் அடகு கடை நடத்துவதோடு நகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை தன்ராஜ் சவுத்ரி வீட்டிற்கு வந்த வடமாநிலத்தவர்கள் ஹிந்தியில் பேசி, கதவைத் தட்டியதை அடுத்து கதவைத் திறந்து பார்த்துள்ளார். அவரை தள்ளிவிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ஆஷா மற்றும் அகிலை கொடூரமாக கொலை செய்துவிட்டு தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மருமகள் நிகிலை கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ நகைகள் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹார்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்ராஜ் சகோதரியின் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீ நாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார் ஒலையாம்புத்தூர் கிராமத்தில் நிற்பதை அறிந்த போலீசார் காரை கைப்பற்றிக் கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

அப்போது எருகூர் வீரனார் மேட்டுத் தெரு சவுக்குத் தோப்பில் மறைந்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்கள் மஹிபால்சிங், மணிஷ், ரமேஷ் பாட்டில் ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றொரு கொள்ளையன் கர்ணாராம் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார்.


இதில் மஹிபால்சிங் நகைகளை எடுத்து தருவதாக கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கியுள்ளார். இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். அதைக் கண்ட பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் துப்பாக்கியால் சுட்டதில் மஹிபால்சிங் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார். என்கவுண்டர் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மாவட்ட தலைமை நீதிபதி ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீநாதா பரிந்துரையின்பேரில் மஹிபால்சிங் என்கவுண்ட்டரில் இறந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றி டி.ஜி.பி உத்தவிட்டார். இதனை அடுத்து வழக்கை திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com