வேலூர் நகை திருட்டு - எஸ்.ஐ, 2 காவலர்கள் சஸ்பெண்ட்
வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், 8.5 லட்சம் பணத்தை திருடிய புகாரில் எஸ்.ஐ, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் குருமலை பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாக நடப்பதாகவும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில், நேற்றுக்காலை எஸ்.ஐ. அன்பழகன் மற்றும் 4 காவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கள்ளச்சாராய வியாபாரிகளான செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோரின் வீட்டில்தான் கள்ளச்சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
அதன்பிறகு இருவர் வீட்டின் பீரோ பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றதாக அக்கிராம மக்கள் போலீசாரை வழிமறித்துள்ளனர். தகவலறிந்த ஆய்வாளர் சுதா சம்பவ இடத்திற்குச் சென்று நகை மற்றும் பணத்தை மீட்டு மலைக்கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் இளங்கோவிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஏ.எஸ்.பி தலைமையில் காவலர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று இரவிலிருந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், 2 சாராய வியாபாரிகளின் வீட்டில் நகை, பணம் திருடிய அரியூர் எஸ்.ஐ அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.