பைக்கில் ஆடுகளை திருடும் கும்பல் : தந்திரமாக செயல்பட்டு பிடித்த உரிமையாளர்..!
ஓசூரில் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து ஆடுகளை திருடிய நபரை கையும், களவுமாக பிடித்த உரிமையாளர் அவருக்கு தர்மஅடி கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராமைய்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). இவர் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என மொத்தம் 32 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தினந்தோறும் தொடர்ச்சியாக 5 நாட்களில் 5 ஆடுகள் காணாமல் போனதால் உரிமையாளர் பிரவீன் அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். தனது ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடுவதை உணர்ந்த உரிமையாளர், அவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார்.
அதன்படி, வழக்கம்போல் இன்று ஆடுகளை மேயவிட்டு, மறைவாக ஒளிந்திருந்து உரிமையாளர் நோட்டமிட்டுள்ளார். அப்போது நண்பகல் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஒரு செம்மறி ஆட்டினை பல முயற்சிக்கு பிறகு தூக்கிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர். ஆடு திருடப்படுவதை பதுங்கியிருந்து பார்த்த பிரவீன், அப்பகுதியினரின் உதவியுடன் திருடர்களை கையும் களவுமாக பிடித்தார்.
அத்துடன் ஆடுகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட ஆதங்கத்தில் அவர்கள் திருடர்களுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் காயம்பட்ட திருடர்களை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து ஆட்டின் உரிமையாளர் வழங்கிய புகாரின் பேரில், ஓசூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆடுகளை திருடிய நபர்கள் ஓசூரை சேர்ந்த குணா (29), பழனி (32) என்பது தெரியவந்தது. பின்னர் திருடர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை எச்சரித்த போலீசார், அதுதொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.