ஆவடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாட்டு வாத்தியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆவடி அடுத்த பட்டாபிராமில் வசித்து வரும் தம்பதியருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர், பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், மாலை நேரத்தில் அதே பகுதியில் இசை வகுப்பு நடத்துபவரிடம் 4 ஆண்டுகளாக பாட்டு கற்று வந்துள்ளார்.
அப்போது அவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அதை சோசியல் மிடியாவில் விட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து தனது நண்பர்கள் 4 பேரிடம் இதேபோல் நடந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அந்த சிறுமி, அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் சாமுவேல், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுமியை மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்து வந்ததால் சிறுமி, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாட்டு வாத்தியாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.