பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: தடுத்த மூதாட்டியும் கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் இரண்டு பெண்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் யுனிசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர் வெளியூர் சென்ற நிலையில் அவரது தாயார் அஸ்மத் பீ (80) மற்றும் மனைவி தில்சத் (45) ஆகிய இருவரும் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டின் மேல் உள்ள ஓடுகளை எடுத்துவிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மனைவி தில்சத்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். தடுக்க முயன்ற தாயார் அஸ்மத்தையும் அவர்கள் கொலை செய்துள்ளனர்.
பக்கிரிப்பாளையம் பகுதியில் இதே போன்ற சம்பவம் கடந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. 8 வயது சிறுமியும் அவரது பாட்டியும் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற குற்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூரு - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.