9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தோப்புக்குள் சிக்கினார் போலீஸ் ஏட்டு !
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற வழக்கில், மூன்று மாதம் தலைமறைவாக இருந்த தலைமை காவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் ஒன்பது வயது மகளை, அதே குடியிருப்பில் வசித்து வந்த தலைமை காவலர் சரவணன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சரவணனை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் காவல்நிலையத்தில் இருந்து சரவணன் தப்பியோடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர், சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தலைமைக் காவலர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த சரவணனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள தோப்புக்குள் சரவணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சரவணனை கைது செய்தனர். சரவணன் இன்று மாலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.