பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (19) என்ற இளைஞர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவியை கடத்திச் சென்ற கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.