”பாலியல் தொல்லை கொடுக்கிறார் பிரின்சிபல்”-உ.பி முதல்வருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய பள்ளி மாணவிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 குறுதிக் கடிதம்
குறுதிக் கடிதம் Twitter

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாதில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின் படி, முதல்வர் ராஜீவ் பாண்டே அப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பள்ளி மாணவிகள் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளனர்.

டாக்டர் ராஜீவ் பாண்டே
டாக்டர் ராஜீவ் பாண்டேTwitter

பள்ளி முதல்வர் டாக்டர் ராஜீவ் பாண்டே பல்வேறு காரணங்களை கூறி மாணவிகளை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து தகாத முறையில் தொட்டதாகவும், இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமிகள் முதலில் பேசுவதற்கு அஞ்சியுள்ளனர். பின்னர் இது குறித்து தங்களது பெற்றோரிடத்தில் தெரிவிக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே பள்ளி முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிறுமிகள் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து முதலில் அறிந்த பெற்றோர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். இதனால் பெற்றோருக்கும், பாண்டேவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

எனவே மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிச் சொத்துக்களுக்குள் அத்துமீறி நுழைந்து பள்ளி முதல்வரை தாக்கியதாகக் கூறி மாணவர்களின் பெற்றோர் மீது பள்ளி முதல்வர் பதில் புகார் அளித்துள்ளார். இதனால் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பள்ளியில் பெற்றோருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாண்டே இறுதியில் கைது செய்யப்பட்டார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்file image

யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், “ நாங்கள் நான்கு மணி நேரம் காவல் நிலையத்தில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனிமேல் வகுப்புகளுக்குச் செல்லக் கூடாது என்று பள்ளி அதிகாரிகள் மாணவிகளுக்கு உத்தரவிட்டார்கள். முதல்வர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினர் அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரால் துன்புறுத்தப்பட்ட நாங்கள் அனைவரும் இந்த பிரச்சினையை உங்களுடன் நேரில் விவாதிக்க விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் உங்கள் மகள்கள் போன்றவர்கள் உங்களைச் சந்தித்து நியாயம் கேட்க எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காசியாபாத் காவல்துறையின் மூத்த அதிகாரி சலோனி அகர்வால் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com