பள்ளி மாணவி காணாமல்போன வழக்கு: டியூஷன் ஆசிரியர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
பள்ளி மாணவி காணாமல்போன வழக்கில், மாணவியை கடத்திச் சென்ற டியூஷன் ஆசிரியரை தேடுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஜூலை 30-ஆம் தேதி கடைக்கு செல்வதாக்கூறி வீட்டை விட்டுச் சென்ற தனது 16 வயது மகளை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக முதலில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர், பின்னர் விசாரணையில் மாணவி கடத்தப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி, தனது வீட்டருகே ட்யூஷன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் பயின்று வந்ததும், அவர் கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஆசிரியர் மணிமாறன் என்பவர் மீது கடந்தாண்டு டிசம்பர் மாதம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரையும், மாணவியையும் தேடி வருகின்றனர்.
அந்த ஆசிரியருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், மனைவியை பிரிந்து கோவையில் வசித்து வந்ததும், இதேபோன்று நாகர்கோவில் மாவட்டத்திலும் சிறுமி காணாமல் போன வழக்கில் மணிமாறனுக்கு தொடர்பு இருப்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, மணிமாறன் புகைப்படம் போஸ்டராக ஒட்டப்பட்டு, சிறுமி காணாமல் போன வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவரது அடையாளங்களை குறிப்பிட்டு சரவணம்பட்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.