கள்ளக்குறிச்சி: தாளாளர் ஜாமீனில் விடுவிப்பு! முதல்வரை சந்திக்க சென்ற மாணவியின் பெற்றோர்!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பெற்றோர், வழக்கறிஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 10 பேர் நாளை தமிழக முதல்வரை சந்திக்க இன்று கிராமத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் கட்டமாக பிரேத பரிசோதனை 14. 07. 2022 அன்று செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் 19.7.2022 அன்று மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்க அனுமதி தரவில்லை எனவும் தங்களது தரப்பில் ஒரு மருத்துவரை அமைக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது. ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகிய பொழுது இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இரண்டு பிரேத பரிசோதனைகளின் போதும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு அறிக்கை முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து இன்று பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நாளை காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்திப்பதற்காக மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர் பெரிய நெசலூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி, வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேரை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மகன் வெங்கடேஸ்வரன் கடலூர் மாவட்ட உழவு பிரிவு ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் இரண்டு கார்களில் இன்று 2.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு நாளை முதல்வரை சந்திக்க இருப்பதாக தெரிவித்து சென்றனர்.
மாணவியின் தாய் செல்வி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, அவர்கள் ஜாமீனில் தான் வெளியே வந்திருக்கிறார்கள் குற்றமற்றவர்கள் என அறிவித்து வெளியே வரவில்லை. அவர்கள் தான் குற்றவாளி என நிரூபிப்பேன் என தெரிவித்தார்.