செஞ்சி: தற்காப்புக்காக தந்தையை கொலை செய்த மகள்.. வழக்கிலிருந்து விடுவித்த எஸ்.பி

செஞ்சி: தற்காப்புக்காக தந்தையை கொலை செய்த மகள்.. வழக்கிலிருந்து விடுவித்த எஸ்.பி
செஞ்சி: தற்காப்புக்காக தந்தையை கொலை செய்த மகள்.. வழக்கிலிருந்து விடுவித்த எஸ்.பி

செஞ்சி அருகே தன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் ஒரு சிறுமி. தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி, சிறுமியை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தை சார்ந்தவர் மாற்றுத்திறனாளியான வெங்கடேசன்(வயது 40). இவர் தன்னுடைய மனைவி இறந்த நிலையில் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். வெங்கேடசனின் மூத்த மகள் சென்னையில் உள்ள பிரபல துணி கடையில் வேலை செய்து வரும் நிலையில், இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பு அவலூர்பேட்டையில் படித்து வருகிறார். வெங்கடேசன், நேற்று உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்காக மேல்மலையனூர் சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பிய அவரை மார்பில் யாரோ கத்தியில் குத்தி கொலை செய்துள்ளனர்.

சடலமாக கிடந்த அவரைக் கண்டு அவரின் உறவினர்கள் அதிர்ச்சியுற்று கூச்சலிட்டுள்ளனர். பின் அவலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் நேரடி விசாரணை செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலால் இக்கொலை நடந்ததா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை செய்த நிலையில், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போலிசார் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் வெங்கடேசனின் இரண்டாவது மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்காப்புக்காக கொலை செய்ததாக அச்சிறுமி ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், சிறுமியை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தற்காப்புக்காக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறிய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழக்கிலிருந்து அந்த சிறுமியை விடுவிக்க உத்தரவிட்டார்.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com