"அவங்க உள்ளே வந்தால் தெய்வகுத்தமாகிடும்"- அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியில் அவலம்!

"அவங்க உள்ளே வந்தால் தெய்வகுத்தமாகிடும்"- அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியில் அவலம்!
"அவங்க உள்ளே வந்தால் தெய்வகுத்தமாகிடும்"- அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியில் அவலம்!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மந்திகுளம் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என அம்மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவனூர் ஊராட்சி மந்திகுளம் கிராமத்தில், ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான பழமையான மந்தையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்துவரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரும் வசித்துவருகின்றனர்.

‘நிர்வாக குழுவில் இடம் கொடுத்தால் சரிக்கு சமமாக ஆகிடுவிங்க’ என மறுப்பு!

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஊர் பொது கோயிலான மந்தையம்மன் கோயிலுக்குள் ‘பட்டியலினத்தவர்கள் சென்று சாமி கும்பிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடும்’ என அக்கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு சாமி அருள் வந்து சொன்னதாக கூறி, பட்டியலின சமூகத்தினரை கோயிலுக்குள் விடாமல் தடுத்துவருவதாகவும், கோயிலுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பதவியில் இருப்பதால், பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்களையும் உறுப்பினராக்க வேண்டும் என கூறிய நிலையில் அதனையும் மறுத்துவருவதாகவும் குற்றம்சாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின சமூகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது என அருள் சொன்ன பெண்!

இந்த விவகாரம் குறித்து பேசிய மந்திகுளம் கிராம இளைஞர்கள் நம்மிடையே பேசுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயிலில் கடந்த 1993ஆம் ஆண்டு சாமி கும்பிடுவதில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையால் கோயில் திருவிழா நடைபெறாமல் நின்றுவிட்டது. அந்த சூழலுக்கு பின் கோயிலுக்குள் சென்று எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை சாமி கும்பிடகூடாது என ஒரு சமூக்கத்தினர் மிரட்டுகின்றனர். கோயில் நிர்வாகத்தில் கூட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே பதவியில் இருந்துகொண்டு அனைத்து நிர்வாகத்திலும் மோசடி செய்வதோடு், ‘பட்டியலின மக்களுக்கு நிர்வாக பதவி வழங்கினால் சரிசமமாக அமர்வார்கள்’ என கூறி தரமுடியாது என கூறி மறுத்துவருகின்றனர்.

உள்ளே அனுமதிக்க முடியாது என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க!

மேலும் அதே சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் அருள்வந்து சாமியாடி ‘பட்டியலின மக்கள் உள்ளே வந்து சாமி கும்பிட கூடாது’ என கூறுவதாக சொல்லி, எங்களை கோயிலிற்குள் சென்று சாமி கும்பிட அனுமதி மறுத்துவருகின்றனர். இது தொடர்பாக ஏதும் நாங்கள் கேட்டால், நேரடியாக சாதி பெயரை குறிப்பிட்டு பேசுவதோடு, பேச்சுவார்த்தை நடத்தும்போது எழுந்து அலட்சியமாக சென்றுவிட்டு, கோயிலிற்குள்ளே அனுமதிக்க முடியாது, என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க’ என பேசுகின்றனர்.

இதுகாலம் கட்டிவந்த கோயில் வரியை வாங்க மறுப்பு!

இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பாக கோயிலுக்கு நாங்கள் செலுத்தி வந்த வரியையும் வாங்க மறுத்தனர். ஆனால் அப்போது நாங்கள் சத்திரபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னர், காவல்துறை நடவடிக்கைக்கு பிறகு தான் வரியை வாங்கி கொண்டனர். இந்த கோயில் நிர்வாக குழுவில் உள்ளவர்களால் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கும் நிதி மற்றும் உதவிகள் கூட அவர்களை மீறி வராத வகையில் தடுத்துவிடுகின்றனர். இந்நிலையில் தான் இது குறித்து மாவட்ட ஆட்சியராவது உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையோடு புகார் தெரிவித்திருக்கிறோம்” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com