சத்தியமங்கலம்: கோயில் அருகே செங்கற்களால் தாக்கி இளைஞர் கொலை... போலீசார் விசாரணை

சத்தியமங்கலம்: கோயில் அருகே செங்கற்களால் தாக்கி இளைஞர் கொலை... போலீசார் விசாரணை
சத்தியமங்கலம்: கோயில் அருகே செங்கற்களால் தாக்கி இளைஞர் கொலை... போலீசார் விசாரணை

சத்தியமங்கலம் காவல்நிலையம் அருகே 30 வயதுள்ள இளைஞர் செங்கற்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பு, தலையில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 30 வயது மதிப்புள்ள இளைஞரின் தலையில் செங்கலை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலையில் ரத்தக்காயங்களுடன் செங்கல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல கொலை செய்யப்பட்ட நபரின் தலை அருகே துணிகள் அடங்கிய பேக் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்த இரு தடங்களையும் கைப்பற்றிய போலீசார் கொலை செய்யப்பட்ட நபர் செங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்போது கோயில் பிரகார சுவர் கட்டுமானப்பணி நடைபெறுவதால் கோயில் முன்வாசல் கதவு முன்பு மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மணல் குவியலுக்கும் கோயில் வாசல்படிக்கும் இடையே இருந்த மறைவான பகுதியில் நடந்த கொலை சம்பவம் வெளியே தெரியவில்லை.

இந்நிலையில் கோயில் பூசாரி இன்று காலை கோயில் வாசலை திறக்கும்போது கொலை நடந்தது தெரியவந்தது. கொலையான சம்பவயிடத்திற்கு மேலே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது பழுதடைந்ததால் கொலை சம்பவம் பதிவாகவில்லை. இதனால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com