சேலம்: மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: இரண்டு தொழில் அதிபர்கள் கைது
சேலத்தில் நட்சத்திர தங்கும் விடுதியில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக தொழிலதிபர்கள் இரண்டு பேரை அதிரடியாக போலீசார் கைது செய்யதனர்.
சேலம் ஸ்டேட்பாங்க் காலனி அருகே உள்ள பிரபல நட்சத்திர தங்கும் விடுதியில் இயங்கும் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்து கொள்வதற்காக வினோத்குமார் என்பவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பெண்கள் வினோத்குமாரை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அவருக்கு உடன்பாடு இல்லாத நிலையில் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் காவல் நிலையத்தினர், சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெங்களூரைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தொழிலதிபர்களான முள்ளுவாடிகேட் பகுதியைச் சேர்ந்த தீரஜ்குமார் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த பிரபு ஆகியோர் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மூன்று பெண்களையும் மீட்ட போலீசார், மசாஜ் சென்டர் நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள்மீது பாலியல் தொழில் செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.