சேலம்: திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவி கடத்தல் - தொழிலாளி போக்சோவில் கைது
ஆத்தூர் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் அரவிந்த் (24). இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்,
இது குறித்து மாணவியின் பெற்றோர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், இதனையடுத்து மாணவியை கடத்திச் சென்ற சென்ட்ரிங் தொழிலாளி அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர், இதைத் தொடர்ந்து மாணவியை சேலம் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.