சேலம் | சட்டவிரோத குழந்தை விற்பனை - ஆறு பேர் கொண்ட கும்பல் கைது
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகசுதா ஆகியோர், நேற்று ஈரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தையை, எடப்பாடியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கு ரூபாய் 7 லட்சத்திற்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மோகன்ராஜ் அவரது மனைவி நாகசுதா ஆகிய இருவரையும் கைது செய்த கவல்துறையினர் அவர்களது செல்போனை சோதனை செய்தனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதும் செல்போனில் குழந்தைகளின் புகைப்படங்கள் கோப்புகளாக வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைடுத்து ஸ்ரீதேவி, பர்வீன், பத்மாவதி, ஜனார்தனன் ஆகிய நான்கு பேரையும் பிடித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தைபேறு இல்லாத தம்பதிகளை பட்டியலில் வைத்துக் கொண்டு, வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் குடும்பத்தினரை குறி வைத்து அவர்களை மூளைச்சலவை செய்து குழந்தை விற்பனைக்கு தூண்டி கணிசமான தொகைக்கு விற்பனை செய்து குழந்தையின் பெற்றோருக்கு ஒரு பங்குத் தொகையை வழங்கி வருவது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து பிடிபட்ட ஆறு பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சேலம் மாநகர காவல்துறையினர் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.