சேலம் | நகைக்காக தம்பதியர் கொலை - வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது
செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி வித்யா ஆகியோர், அவர்களது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் சவுத்ரிஎன்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.
கூலி வேலை செய்து வரும் சந்தோஷ்சவுத்ரி திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வரும் நிலையில், கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சந்தோஷ் மது போதையில் பாஸ்கரனின் மளிகை கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளார். அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த நகையை திருட திட்டமிட்ட சந்தோஷ்சவுத்ரி அதே இடத்தில் காத்திருந்து வித்யா வீட்டிற்குள் சென்றபோது பின் தொடர்ந்து சென்று சுத்தியலால் கடுமையாக தாக்கியதாகவும்,
இதையடுத்து வித்யாவை தேடிவந்த பாஸ்கரனையும் அதேபோல் தாக்கி அவர் கழுத்தில் இருந்த ஏழு சவரன் செயின் மற்றும் வித்தியா கழுத்தில் இருந்த முணேகால் சவரன் செயினையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையை செய்து விட்டு சுத்தியலை வீட்டுலேயே வீசிவிட்டு திருடப்பட்ட நகையோடு தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த சந்தோஷை போலீசார் சுமார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.