தாயுடன் கோயிலுக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் கைது!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாயுடன் கோயிலுக்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் வீட்டில் இருந்தே படித்து வருகிறார்.
இந்த நிலையில், தாயும், மகளும் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது தனது மகளை காணவில்லை என தாய் தேடியுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி, முத்துநாயக்கன்பட்டி கிராமம் காரைச்சாவடி பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் குணசேகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து தனது மகளை குணசேகரன் கடத்தி சென்றதாக சிறுமியின் தாய் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பெண், மைனர் என்பதால் கடத்தலாகவே புகாரை பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் குணசேகரனை கைது செய்து அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குணசேகரன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.