பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக இளைஞர் போக்சோவில் கைது
ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள குண்டுமணியன் கரத்தில் வசிப்பவர் அரவிந்த். ஓட்டுனராக வேலை செய்து வரும் இவர், அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 22-ம் தேதி பள்ளி மாணவியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பக்கத்து தெருவைச் சேர்ந்த அரவிந்த் கடத்தி சென்று விட்டதாகவும் போலீசில் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா, ஓமலூரில் பதுங்கி இருந்த அரவிந்தை கைது செய்து, மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.