சேலம்: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக சமூக செயல்பாட்டாளர் கைது
சேலத்தில் தொழிலதிபரை மிரட்டி ரூபாய் 35 ஆயிரம் பறித்த வழக்கில் சமூக செயற்பாட்டாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சிவாஜி பிளாஸ்டிக்ஸ் என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் மொத்த விற்பனை கடை உள்ளது. இதன் உரிமையாளர் அசோக்குமார் என்பவர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில், தன்னை சிலர் மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த செவ்வாய்பேட்டை போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய சமூக செயற்பாட்டாளரும் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி தலைவருமான பூமொழி என்பவரை கைது செய்தனர். தொழிலதிபர் அசோக்குமாரிடம் பூமொழி உள்ளிட்ட சிலர் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பது சட்டவிரோதம் என கூறி மிரட்டியதாகவும் இதுகுறித்து புகார் அளித்து கடைக்கு சீல் வைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறி அசோக்குமாரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து பூமொழியை செவ்வாய்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.