ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி! அண்ணன், தம்பி 2 பேருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி! அண்ணன், தம்பி 2 பேருக்கு 10 ஆண்டு சிறை!
ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி! அண்ணன், தம்பி 2 பேருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூபாய் 5.65கோடி மோசடி செய்த இரண்டு பேருக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்), தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கரண்டிபாளையத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் நடத்தி வந்தார். இவரது தம்பியான சக்திவேல் நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். நிறுவனத்தின் ஒரு கிளை பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், "ரூபாய் 1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 முதல் 10 ஈமு கோழிகளை அளிப்போம் என்றும், அதற்கு தேவையான ஷெட் அமைத்து கொடுத்து, தீவனம், பராமரிப்பு தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6,000 மற்றும் போனஸாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், 2 ஆண்டுகள் முடிவில் ஈமு கோழிகளை பெற்றுக்கொண்டு, முதலீட்டு தொகையான ரூபாய்.1.50 லட்சம் திருப்பி அளிக்கப்படும்" என விளம்பரப்படுத்தினர்.

மேலும் அதேபோல, விஐபி திட்டம் உட்பட 3 வெவ்வேறு திட்டங்களையும் அறிவித்தனர். இவற்றை நம்பி கோவை, பொள்ளாச்சி, சூலூர், திருப்பூர், கேரளாவின் சில பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 295 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். அதில், மோசடியில் ஈடுபட்ட மயில்சாமி, சக்திவேல் ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மொத்தம் 5.68 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com