போலியாக ஆவணங்கள் தயாரித்து இடத்தை விற்பனை செய்வதாக ரூ.30 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி (35), இவர், அண்ணா நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன் கட்டடங்களை கட்டி விற்பனை செய்தும் வருகிறார். இந்நிலையில், இவருக்கு பழக்கமான நபர் மூலமாக மாங்காடு கெருகம்பாக்கத்தில் காலி இடம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து இடத்தை பார்த்துவிட்டு அந்த இடத்திற்காக ரூ.30 லட்சம் பணத்தை முன் பணமாக நல்லுசாமி கொடுத்துள்ளார். மேலும் அந்த இடம் குறித்து சந்தேகத்தின் பேரில் சர்வே நம்பரை சோதித்து பார்த்த போது அந்த இடத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது.
ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் இடத்தை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இது குறித்து நல்லுசாமி ராமாபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த கிஷோர் (31), சிவராஜ் (41), ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலி ஆவணங்கள் மூலம் இடத்தை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.