இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி: டெல்லி இளம்பெண் கைது

இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி: டெல்லி இளம்பெண் கைது
இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி: டெல்லி இளம்பெண் கைது

இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம்  ரூ. 2 கோடி ஏமாற்றிய கும்பலை சேர்ந்த டெல்லி இளம்பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த சுதாஸ்ரீதரன் என்பவரிடம் 2019ம் ஆண்டு செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி இறந்துபோன அவர் கணவரின் இன்ஸ்யூரன்ஸ் பணம் நிலுவையில் இருப்பதாகவும் அதை பெற்று தருவதாக நம்ப வைத்து பல்வேறு காரணங்களை சொல்லி வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 2.06 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 31.03.2021 அன்று டெல்லியைச் சேர்ந்த அமன்பிரசாத் உட்பட 6 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி நேரடி மேற்பார்வையில் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான  தனிப்படையினர் புகார்தாரர் சுதாஸ்ரீதரனிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய கும்பலை சேர்ந்த தலைமறைவாக இருந்த டெல்லி திலக்நகரை சேர்ந்த சிம்ரான்ஜித் சர்மா (29) என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

பிறகு மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் அவரை திஸ்ஹசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதான சிம்ரன்ஜித்சர்மா டெல்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை செய்தபோது மோசடி கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பழக்கத்தின் காரணமாகவும், தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மோசடி செயலில் ஈடுபட்டதாக கைதான  சிம்ரன்ஜித்சர்மா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல், கைது செய்யப்பட்ட சிம்ரன்ஜித் சர்மா உட்பட பல நபர்களின் பெயரில் பல வங்கி கணக்குகளை துவக்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த நபர்களிடம் பல கோடி ரூபாய்க்கு ஏமாற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது. கைதான சிம்ரன்ஜித்சர்மாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com