போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாவுக்கு துப்பாக்கிச் சூடு!

செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற A+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த ரவுடி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாச்சலம். இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் A+ ரவுடி பிரிவில் இருந்து வருகிறார். 

தணிகாசலம்
தணிகாசலம்புதிய தலைமுறை

பல வழக்குகளில் ஒன்றாக, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். 

அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வைத்து, தணிகா போலீசார் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அவசர பிரிவு
அவசர பிரிவுபுதிய தலைமுறை

ஒருகட்டத்தில் ரவுடி தணிகா காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்த போது போலீசார் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளனர். அதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் காவல்துறையினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com