காஞ்சிபுரம்: ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடியான படப்பை குணாவின் குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி எல்லம்மாளை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மதுரமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி குணா மீது எட்டு கொலை வழக்கு உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்தாண்டு நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த குணா, தற்போது தலைமறைவாக உள்ளார். குணாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக காவலரான வெங்கடேசன் என்பவரும், சிவா எனும் மற்றொரு ரவுடியும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலரும் குணாவின் மனைவியுமான எல்லம்மாள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு எஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் எல்லம்மாளையும், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட எல்லம்மாளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.