கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது
நாமக்கல் அருகே கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை மையமாக வைத்து கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி அரைபள்ளன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை மையமாக வைத்து கஞ்சா விற்பனை செய்ய சிலர் ஈடுபட்டுள்ளதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் இரவு பகல் நேரங்களில் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மாரக்கால் காடு பகுதியில் முட்புதர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது முட்புதரில் இருந்து தப்பித்து ஓடியவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் போலீசாரை கண்டதும் தப்பித்து ஓடியது பிரபல ரவுடி அரைபள்ளன் என்கிற செந்தில் என்பது தெரியவந்தது. கஞ்சா விற்பனையின் போது கைது செய்யப்பட்ட பவானியை சேர்ந்த செந்தில் மீது கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.
இதனைதொடர்ந்து முட்புதர் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்த பிரபல ரவுடி செந்திலை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் பொழுது போலீசாரிடம் பிடிபட்ட பொழுது அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

