சென்னையில் அடுத்தடுத்து 'ஸ்கெட்ச்' போட்டு சுற்றிவளைக்கப்படும் ரவுடிகள்

சென்னையில் அடுத்தடுத்து 'ஸ்கெட்ச்' போட்டு சுற்றிவளைக்கப்படும் ரவுடிகள்
சென்னையில் அடுத்தடுத்து 'ஸ்கெட்ச்' போட்டு சுற்றிவளைக்கப்படும் ரவுடிகள்

சென்னையில் சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பொறுப்பேற்றதும் ரவுடிகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா பாடாய்படுத்தி வரும் இந்த சமயத்தில் ரவுடிகள் விஷயத்தில் காவல்துறை கவனம் செலுத்துவது சென்னையில் சட்டம், ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையின் டாப் 10 ரவுடிகளில் முதலிடத்தில் இருக்கும் தென்சென்னையின் பிரபல ரவுடி சி.டி மணியை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். நீண்டகாலம் தலைமறைவாக இருந்த சி.டி மணி, காவல்துறையால் பிடிக்கப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கிறார்.

இதேபோல, வடசென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியும் கடந்த மே மாதம் கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார். சிடி மணி போலவே காக்கா தோப்பு பாலாஜியும் சென்னை நகரில் மோஸ்ட் வான்ட்டடு ரவுடிகள் லிஸ்ட்டில் இருப்பவர் என்கின்றனர் காவல்துறையினர். இவர் மீது 52 வழக்குகள் உள்ளது. 7 கொலை வழக்குகள், கொலை முயற்சி 20 வழக்குகள், பிற வழக்குகள் 25 உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்கே நகர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த பள்ளத்தில் அவர் தவறி விழுந்தார். அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் காக்கா தோப்பு பாலாஜி என்று தெரியவந்தது. அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியை வரும் 25 ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வடசென்னைக்கு காக்காதோப்பு பாலாஜி, தென்சென்னைக்கு சி.டி.மணி என தங்களுக்குள் எல்லைகளை பிரித்துக்கொண்ட இருவரும் ஒவ்வொரு முறையும் தப்பிக் கொண்டே இருந்ததாக கூறுகிறார்கள் காவல்துறையினர். கடந்த ஆண்டு அண்ணா சாலையில் காக்கா தோப்பு பாலாஜியும், சி.டி.மணியும் காரில் சென்றபோது அவர்களது எதிரிகளால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது மயிரிழையில் இருவரும் தப்பினர். இந்நிலையில் சென்னையை விட்டு வெளியேறிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரவுடிகளை அடக்குவதிலும் கைது செய்வதிலும் பெருநகரகாவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் சூப்பர் ஸ்கெட்ச் அணுகுமுறைகள் நல்ல பலனைத்தரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com