பாலியல் கொடுமைக்கு ஆளான ரோஹிங்ய பெண்கள்: அதிர்ச்சி தகவல்!
வங்கதேசத்துக்கு அடைக்கலமாக வந்துள்ள ரோஹிங்ய இன பெண்களில் பலர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
வங்கதேச அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில், மியான்மர் ராணுவத்தால் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்ற பெண்களும் மியான்மர் ராணுவத்தினர் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மியான்மர் ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களிடம் வந்து உண்மையை கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியின் செய்தி தொடர்பாளர் ஜா தே தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆங் சான் சூச்சியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.