
டெல்லியில் உள்ள ப்ரகதி மைதானம் சுரங்கப்பாதையில் கடந்த 24 ஆம் தேதி டெலிவரி ஏஜெண்ட் ஒருவரும் அவரது உதவியாளரும் ரூ.2 லட்சம் பணத்துடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த காரை வழிமறித்து கொள்ளையடித்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அந்த அளவிற்கு அந்த பட்டப்பகலில் முக்கியமான சாலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வீடியோவின்படி, கையில் துப்பாகியுடன் ஒருவர் ஓட்டுநரை மிரட்ட முன் இருக்கையில் இருந்தவரிடம் இருந்து ரூ. 2 லட்சம் கொண்ட பையை மற்றொருவர் பறித்தார். பின்னர் துப்பாக்கியை கொண்டு மிரட்டியவரும், பணத்தை கைப்பற்றியவரும் சேர்ந்து இருசக்கர வாகத்தில் காத்திருந்த இருவருடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.
இந்த சம்பவம் நடைபெறும் போதும் போது அந்த வழியாக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சில நொடிகள் நின்று பார்க்கின்றனர். பின்னர் கடத்தல் கும்பலின் கைகளில் துப்பாக்கி இருந்ததை பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் அப்படியே பதிவாகியுள்ளது.
இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கொள்ளை அடித்தல் மற்றும் பலத்த காயம் ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
சம்பவம் குறித்து பேசிய டெல்லி துணை போலீஸ் கமிஷ்னர் ப்ரணவ் தயால், “சந்தினி சௌக் எனும் இடத்தில் டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்பவர் படேல் சஜன் குமார். இவர் தனது உதவியாளர் ஜிகார் படேல் என்பவருடன் குருக்ராம் எனும் இடத்தில் இருந்து பணத்தை கொடுக்கும் இடத்திற்கு ஓலா காரில் சென்றுள்ளனர். ரிங் ரோடில் இருந்து ப்ரகதி மைதானம் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “பணத்தை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் பூரண குயிலா அருகே மதுரா சாலையை நோக்கி வெளியேறினர். தொடர்ந்து மதுரா சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்தில் கொள்ளையர்கள் டெல்லியை நோக்கி தப்பிச் செல்வதை காண முடிந்தது. மேலும் டெலிவரி ஏஜெண்ட்கள் கொள்ளையர்களால் உளவு பார்க்கப்பட்ட வீடியோ ஆதாரங்களும் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் “டெல்லி துணை நிலை ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டெல்லி மக்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசால் டெல்லியை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடியவில்லை என்றால் பொறுப்பை எங்களிடம் அளித்துவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை நிலை ஆளுநராக வி.கே. சக்சேனா செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.