‘தூக்க மாத்திரை கொடுங்க’... பிளான்போட்டு ஷட்டரை மூடிய கொள்ளையர்களின் வெறிச்செயல்..!
மருந்து கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை அபிராமபுரம் சேமியர்ஸ் சாலையில் உள்ளது மெட் பிளஸ் மருத்து கடை. இங்கு பணிபுரிந்து வருபவர் விக்னேஸ்வரன். நேற்றிரவு மருந்து கடைக்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்துள்ளனர். பின்னர் பணியிலிருந்த விக்னேஸ்வரனிடம் தூக்க மாத்திரை கேட்டிருக்கின்றனர். ஆனால் மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கொடுக்க முடியாது என்று விக்னேஸ்வரர் வழங்க மறுத்துவிட்டார். பிறகு வெளியே வந்த 2 பேரும் சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அதே மருந்து கடைக்குள் புகுந்து ஷட்டரை இறக்கி விட்டு கத்தியை காட்டி விக்னேஷ்வரனை மிரட்டியிருக்கின்றனர்.
பிறகு அங்கு இருந்த ரூ.23,400, விக்னேஸ்வரன் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ10,000 மதிப்பிலான ரெட்மி செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பிறகு விக்னேஸ்வரனை தலையில் அடித்து கீழே தள்ளிவிட்டு ஷட்டரை முழுவதுமாக மூடி தாழிட்டு விட்டு அந்த இரண்டு பேரும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் கடையின் மேல் குடியிருந்த நபர், சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தபோது கொள்ளை சம்பவத்தை கண்டு அதிர்ச்சிடைந்தார். தகவல் அறிந்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.