நகை பறித்து ஓட முயன்ற 3 பெண்கள் சிறையில் அடைப்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள் நகைகளை வாங்காமல் வெவ்வேறு டிசைன்களை மட்டும் பார்த்து கொண்டிருந்ததால் நகை கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி சென்றுள்ளனர். இது குறித்து நகைகடை ஊழியர் ரமேஷ் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில்
ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கூறைநாட்டை சேர்ந்த சந்திரகலா என்பவர் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 3 பெண்கள் அவரிடம் பேச்சு கொடுத்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிசெயினை பறித்துள்ளனர். சந்திரகலா சத்தம்போடவே பொதுமக்கள் செயின் பறித்து கொண்டு தப்பி சென்ற 3 பெண்களை பிடித்து மயிலாடுதுறை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி, மல்லிகா, ரத்னா என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை கடையில் நகை வாங்குவது போல் நகை திருட முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.