
கோவை புலியகுளம் கிட்னி சென்டர் அருகே உள்ள கிரீன் பீல்ட் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (63). இவருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கலந்துகொடுத்த வர்ஷினி, அவரது நண்பர் அருண்குமார் மற்றும் ஓட்டுநர் நவீன்குமார் ஆகியோர் அவருடைய வீட்டில் இருந்த தங்க, வைர நகைகள் சுமார் 100 பவுன் மற்றும் பணம் ரூபாய் 2.5 கோடி ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அருண்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 31,20,500 ரூபாயை சேலம் வருமான வரித்துறையினர் மூலம் கைப்பற்றினர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். வர்ஷினியிடமிருந்து சுமார் 70 சவரன் தங்க வைர வளையல்கள் மற்றும் 35 லட்சம் ரூபாய் பணமும், நவீன்குமாரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை 100 சவரன் தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.48,00,000 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான வர்ஷினிக்கு ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவை தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.