மனைவி நடத்தையில் சந்தேகம் - 6 மாத குழந்தையை தெருவில் தூக்கி வீசிய கொடூர தந்தை
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் 6 மாத குழந்தையை தெருவில் வீசி எறிந்த தந்தையை உறவினர்கள் அடித்து உதைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 6-வது தெருவில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் - திரிஷா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. 6 மாத ஆண் குழந்தை (பெயர் வைக்கப்படவில்லை) உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி திரிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் சுரேஷ் மதுபோதையில் மனைவி திரிஷாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுரேஷ் தனது 6 மாத ஆண் குழந்தையை ரயில்வே டிராக்கில் போட்டு விடுவதாகக் கூறி தூக்கிக்கொண்டு வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் வசிப்பவர்கள் சத்தம் போடவே சுரேஷ் மதுபோதையில் குழந்தையை தெருவில் தூக்கி வீசியெறிந்தார். அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஓடிச் சென்று குழந்தையை தூக்கினர்.
இதில் குழந்தையின் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தையை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தூக்கி வீசியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. குழந்தை தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளது.
இதற்கிடையில் குழந்தை தூக்கி வீசியெறிந்த சுரேஷை உறவினர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து சுரேஷ் வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆலா மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தையை தந்தையே தூக்கி வீசியது தொடர்பாக திரிஷாவின் சகோதரி ஷியாமிளா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடிக்கடி சகோதரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குடித்துவிட்டு தகராறு செய்யும் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குடிபோதையில் அடிக்கடி சுரேஷ் பிரச்சினை செய்து வந்தார். அவரை கண்டித்தால், தான் பாஜகவில் இருப்பதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என சுரேஷ் மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஷியாமளா கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தஞ்சை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 12 வயது சிறுவன் கைது!