\
கேரள தொழிலதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் மீட்பு: தொடரும் விசாரணை

கேரள தொழிலதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் மீட்பு: தொடரும் விசாரணை

கேரள தொழிலதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் மீட்பு: தொடரும் விசாரணை
Published on

கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் இன்று சிறுவாணி சாலையில் போலீசாரால் மீட்கப்பட்டது.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50). இவர், கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன் தினம், தனது கார் ஓட்டுநர் சம்சுதீன் (42) என்பவருடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கிளம்பினர்.

இதையடுத்து நேற்று அதிகாலை கோவை நவக்கரை அருகே வந்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம கும்பல், அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


இச்சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் எஸ்.பி.அருளரசு உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே கேரள பதிவு எண் கொண்ட கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து கடத்தப்பட்ட கார் என தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காரில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். கோவை - கேரள எல்லையில் கடத்தப்பட்ட கார் சிறுவாணி சாலையில் மீட்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com