வெளி மாநிலங்களுக்கு கடத்தவிருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை அண்டை மாநிலங்களுக்கு திருட்டுத்தனமாக கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சாலை வழியான போக்குவரத்தில் அரிசிகளை கடத்துவது சிறிது சிரமமான விஷயம் என்பதால் பெரும்பாலும் கடத்தல்காரர்கள் ரயில்வே போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். கடத்தல் அரிசிகளை பொதுவாக ரயிலின் சீட்டுக்கு அடியில் வைப்பதும், அல்லது ரயிலில் எங்காவது ஒரு மூலையில் வைத்துவிட்டு தனக்கும் அரிசி மூட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் கடத்தல்காரர்கள் இருந்துவிடுவார்கள். பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தாலும் கடத்தல்காரர்கள் ஒன்றும் தெரியாததுபோல் தப்பிவிடுவார்கள்.
இந்நிலையில் சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் லாக்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் திடீரென சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில் ரயிலில் திருட்டுத்தனமாக அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தது அதனை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் 200 கிலோ அரிசியைக் கடத்திய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.