ராசிபுரம்: பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி – 7 பேர் கைது
ராசிபுரம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடகாடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் கந்தசாமி (23). கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் இவருக்கும் ஆயில்பட்டி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயில்பட்டி பகுதிக்கு சென்ற கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாணவியை கடத்த முயன்றதாக கூறி ஆயில்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி காவல்துறையினர் கந்தசாமி மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.