கேரளாவில் நகை திருடி தப்ப முயன்ற திருடன் - காட்டிக்கொடுத்த டாட்டூ

கேரளாவில் நகை திருடி தப்ப முயன்ற திருடன் - காட்டிக்கொடுத்த டாட்டூ
கேரளாவில் நகை திருடி தப்ப முயன்ற திருடன் - காட்டிக்கொடுத்த டாட்டூ

கேரளாவில் தங்க நகைகளை திருடிவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் மேற்கு வங்காளத்திற்கு தப்ப முயன்ற திருடனை கையில் வரைந்திருந்த டாட்டூவை வைத்து சாதுர்யமாக பிடித்தனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்.

கடந்த 21ஆம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் மண்டல் என்பவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சுஷாந்த் நகை பட்டறையில் 66 கிராம் தங்கத்தை திருடிச்சென்று தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கேரள மாநில ஒல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

குறிப்பாக அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு தப்பிச்செல்ல இருப்பதாக கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் ரயில் மூலமாக ராஜேஷ் மண்டல் தப்பிச்செல்வதை தடுத்து, அவரை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரின் உதவியை நாடினர். கேரள போலீசார் ராஜேஷ் மண்டலின் புகைப்படம் ஒன்றை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு அனுப்பினர். ஆனால் அந்த படத்தில் அவரது முகம் தெளிவாக இல்லை.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், செல்வக்குமார் மற்றும் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தேடினர். மேலும் கேரளாவில் இருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களிலும் தேடினர். ராஜேஷ் மண்டலின் படம் தெளிவாக இல்லாததால் அவரது ஒரே அடையாளமாக இருந்தது அவரது கையில் வரைந்திருந்த டாட்டூ. அதனை வைத்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிரமாகத் தேடினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு நபர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து சோதனை செய்து பார்க்கும்போது கையில் டாட்டூ குத்தப்பட்டு இருந்ததை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் கேரளாவிலிருந்து நகையை திருடி தப்பிச்சென்ற ராஜேஷ் மண்டல்தான் அந்த நபர் என்பது உறுதியானது.

அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயிலில் ஏறி தப்பிச்செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராஜேஷ் மண்டலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 66 கிராம் தங்கத்தை கேரள போலீசாரிடம் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் ஒப்படைத்தனர். டாட்டூவை வைத்து சாதுர்யமாக திருடனை பிடித்த சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரை அதிகாரிகளும், கேரள போலீசாரும் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com