நாகை மீனவன் யூடியூபர்ஸ் வீடுகளில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
இலங்கைக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற பிரபல நாகை மீனவன் யூடியூபர்ஸ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். இதில் மேலும் ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது. லேப்டாப்கள், பெண் டிரைவ், கேமரா உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் சிக்கின.
கடந்த 27-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்று தலைமறைவாக உள்ள பிரபல யூட்டியூபர்ஸ்களை சுங்கத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர். மேலும், சர்வதேச போதை பொருள் கடத்தல் குழுவோடு இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நாகை மீனவன் யூடியூப் சேனல் நடத்தி வந்த கீச்சாங்குப்பம் மற்றும் சேவா பாரதி பகுதிகளை சேர்ந்த குணசீலன், சதீஷ், சிவசந்திரன் மற்றுமொரு குணசீலன் ஆகியோரது வீடுகளில் நேற்றைய தினம் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து குணசீலன் உள்ளிட்டோர் வீடுகளில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் குணசீலன் வீட்டில் இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ், மெமரி கார்டுகள், கேமரா, வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே கஞ்சா கடத்தல் வழக்கில் கல்லார் பகுதியில், மேலும் படகு ஒன்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகின் உரிமையாளர் பாக்யராஜை நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தலைமறைவான கும்பல் குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைக்கு சர்வதேச மதிப்பில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற பிரபல நாகை மீனவன் யூட்டியூபர்ஸ் வீடுகளில் இரண்டாவது நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.