கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேக்கால் பகுதியை சேர்ந்த தனிஷ் (34) - ஷைனி தம்பதியினர், தங்களது 3 வயது ஆண் குழந்தையை காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு காரணமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த மாதம் 25 ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தையை மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் செயல்படும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸை பெற நாகர்கோவில் பகுதியில் செயல்படும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு முதலில் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி தனியார் மருத்துவமனைக்கு குழந்தை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முதலில் குழந்தையை அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது வெறிநாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தை உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லாததால் பெற்றோர் ‘இது வெறிநாய்க்கடியல்ல’ எனக்கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ‘இது வெறிநாய்க்கடிக்கான அறிகுறிகள்தான்’ என உறுதியளித்து பின் வெறிநாய்க்கடிக்கு குழந்தைக்கு மேல் சிகிச்சை தேவை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்டத்திலேயே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் அளித்த அறிக்கையின்படி வெறிநாய்க்கடிக்கான மருத்துவத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் குழந்தையின் உடல் மோசமாக இருந்ததால் உடனே நேரடியாக குழந்தையை தனிமைப்படுத்தி வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பின் ‘குழந்தை பிழைப்பது முடியாத காரியம்’ என கூறிவந்துள்ளனர். ஒரு கட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பார்க்கும் போது குழந்தைக்கு உடலில் அசைவு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனை கண்ட பெற்றோர் உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வெறிநாய்க்கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனக்கூறி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு முறையாக அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்முடிவில், குழந்தைக்கு எலிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் துரித நிலையில் செய்த காரணத்தினால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராக உள்ளது. தற்போது குழந்தை நல்ல நிலையில் காணப்படுகிறார்.
இது குறித்து குழந்தையின் தாய் ஷைனி கூறும் போது, “நாங்கள் குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை மாற்றத்தால் மிகவும் பயந்து நின்றோம். தனியார் மருத்துவமனை எனது குழந்தையின் உடல்நிலையில் காணப்பட்ட அறிகுறிகளை பார்த்து அது வெறி நாய்க்கடி என எழுதினர். ஆனால் அரசு மருத்துவமனையில் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் தனியார் மருத்துவமனை அளித்த அறிக்கையின் அடிப்படையில் எனது குழந்தையை தனிமைப்படுத்தியதோடு, எங்களுக்கும் வெறிநாய்க்கடி ரேபீஸ் தடுப்பு மருந்து செலுத்தினர்.
ஒரு கட்டத்தில் எங்கள் குழந்தை இறந்து விடும் எனவும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் கூறியதோடு, குழந்தை இறந்து விட்டதாக கூறி, கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்டது போன்று பிளாஸ்டிக் பையில் குழந்தையை வைத்து எங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு சென்று விட்டனர்.
இருப்பினும் குழந்தைக்கு இருந்த நாடித்துடிப்பை பார்த்து தான் நாங்கள் கேரளா அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது குழந்தை உடல்நலம் தேறிவருகிறான்.
மருத்துவர்களை தெய்வமாக நினைத்து தான் மருத்துவமனைக்கு போகிறோம். ஆனால் அவர்கள் தெய்வத்தை போல் நடப்பது இல்லை. முறையாக பரிசோதனை செய்யாமல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இனியாவது இதுபோன்ற தவறு நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதற்கிடையே சிறுவனுக்கு முன்பு சிகிச்சையளித்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் சிலர் பெற்றோரிடம், ‘குழந்தை துடிதுடித்து இறப்பதற்கு பதிலாக துடிக்காமல் உயிரிழக்க மருந்து கொடுக்கிறோம். இனிமேல் இந்த குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை’ என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாகிகளிடம் நாம் கேட்டபோது “வெறிநாய்க்கடி என தனியார் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டநிலையில், எங்களது பரிசோதனையில் குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனை வெறிநாய்க்கடி என கூறியிருந்ததால்தான் தனிமைப்படுத்தி குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. வெண்டிலேண்டரில் குழந்தை வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. கேரள மாநிலத்திற்கு குழந்தையை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போதும், எங்கள் தரப்பில் குழந்தைக்கு மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை கூறியிருந்தோம்” என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் காவல்துறையிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. உரிய ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்டு, முழுமையாக விசாரிக்கப்படும் பட்சத்தில்தான் உண்மை முழுமையாக வெளிவரும்!