சிலைகள் திருட்டு: கோவில் குருக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரு கோயில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால பஞ்சலோக சிலை திருடப்பட்ட வழக்கில் கோவில் குருக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை ஸ்ரீரங்கராஜபுரத்தில் உள்ள பழமையான பசுபதீஸ்வரர் கோவில், சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 73 கோவில்களின் சிலைகளை பாதுகாக்கும் மையமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் அமைத்து பிற கோவில்களின் சிலைகளை பாதுகாக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், சில கோவில்களில் இருந்து சிலைகள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், கோவில்களில் இருந்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பதாகவும், அவற்றை மீட்கக்கோரியும் கடந்த 2 ஆண்டுகளாக 200க்கும் அதிகமான புகார்களை அளித்து வந்துள்ளார். தற்போது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலிடம் இந்த புகார் வந்துள்ளது. இதையடுத்து சூடுபிடித்த விசாரணையில் 6 ஐம்பொன் சிலைகள் திருட்டில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பத்து பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெங்கட்ராமன் கூறிய புகாரில், விசாரணையின்போது, போலி சிலைகளை கொண்டு கணக்கு காட்டி இவர்கள் ஏமாற்றியுள்ளனர். 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்ட கோவிலின் பராமரிப்பில் முறைகேடுகள் செய்துவிட்டு, 24 கோடி ரூபாய் நிலுவை என்று இந்த கோவில்களின் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
புகார் தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், பசுபதீஸ்வரர் கோவில் செயல் அதிகாரி காமராஜ், இக்கோவிலின் தலைமை க்ளார்க் ராஜா மற்றும் 6 குருக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
சிலைகள் திருடப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை.