பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்துத்தர லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தடைச்செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை முறைகேடான வகையில் குழுவாக விளையாடியதாகவும், விளையாட்டின்போது பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக அவர் மீது பல பண மோசடி புகார்களும் வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதனுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் புழல் சிறையில் அவரை அடைத்தனர். பின்னர் பப்ஜி மதனுக்கு கொரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்டது. அப்போது அவர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சிறைக்குள் பணிபுரியும் சிறைத்துறையினரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் இன்று வைரலானது. அந்த ஆடியோவில் ரூபாய் 3 லட்சம் வரை லஞ்சமாக தரத் தயாராக இருந்த அவர், அது அதிகமான தொகை என்பதால் சொந்த ஊரான சேலத்தில் அதை தயார் செய்து கொண்டிருப்பதாகவும், சில நாட்களில் கொடுத்து விடுவதாகவும், மதனை பத்திரமாக தனிமைப்படுத்தி பார்த்து கொள்ளுமாறும் சிறை பணியாளரிடம் பேசுவது போல் பதிவாகி உள்ளது.
சிறை பணியாளர்கள், கிருத்திகாவிடம் ஏற்கெனவே இத்தொகை குறித்து பேசியுள்ளனர். அவர்களே தொகையை நிர்ணயித்துள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் ஆடியோ இருந்தது. அந்த ஆடியோவில் கிருத்திகாவுடன் பேசிய நபர், சிறைத்துறை அதிகாரி செல்வம் என தெரியவந்தது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவுவதால் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டிருந்தார். சிறைத்துறை டிஐஜி தலைமையில் குழு அமைத்து லஞ்ச புகார் தொடர்பாக விசாரணை நடத்த சுனில்குமார் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், முதற்கட்டமாக புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.