வரதட்சணை புகாரளிக்க வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது

வரதட்சணை புகாரளிக்க வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது
வரதட்சணை புகாரளிக்க வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது

வரதட்சணை புகார் அளித்த பெண்ணிடம் 20,000 லஞ்சம் கேட்ட வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை பூர்விகமாக கொண்ட மோனிகாஸ்ரீ என்பவர், சென்னை கொளத்தூரை சேர்ந்த மருத்துவர் வினோத் குமார் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது பேசப்பட்ட 200 சவரன் நகையை பெண் வீட்டார் வழங்கவில்லை என மனைவி மோனிகா ஸ்ரீயை மருத்துவர் வினோத்குமார் தாக்கி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தனியாக கிளினிக் வைத்துக்கொடுத்தும், மீதமுள்ள நகைகளையும் கையில் கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு வர வேண்டும் என மோனிகாஸ்ரீயை துரத்தியதாக கூறப்படுகிறது. இந்த வரதட்சணை கொடுமை தொடர்பாக மோனிகாஸ்ரீ கடந்தாண்டு கணவர் வினோத் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் மருத்துவர் வினோத்குமார் உட்பட 8 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தனது உடைமைகளை எடுப்பதற்காக கணவரின் பூட்டிய வீட்டில் தனது கையில் உள்ள மாற்றுச் சாவியை பயன்படுத்தி மோனிகா ஸ்ரீ சென்றுள்ளார். இது போன்ற பிரச்சனை  நடந்து கொண்டிருக்கும் நிலையில் மோனிகா ஸ்ரீ அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக கணவர் வினோத்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜமங்கலம் போலீசார் கணவன் வீட்டிற்கு மனைவி வருவது தவறில்லை என்ற அடிப்படையில் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இதனிடையே வினோத்குமார் நீதிமன்றம் வரை சென்று மறு விசாரணை செய்ய உத்தரவு பெற்றுள்ளார். உத்தரவில் ஏற்கனவே வரதட்சணை கொடுமை வழக்கு இருப்பதால் அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து வரதட்சணை கொடுமை வழக்கை விசாரிக்கும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா, ஒரு லட்ச ரூபாய் அளவில் லஞ்சம் பெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வழக்கை முடித்து வைக்கவும், மேலும் 20 ஆயிரம் ரூபாயை மோனிகா ஸ்ரீயிடம் ஆய்வாளர் அனுராதா லஞ்சம் கேட்டுள்ளார். சாதகமாக விசாரணை நடத்த மேலும் மேலும் லஞ்சம் கேட்டது தொடர்பாக மோனிகா ஸ்ரீ லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆய்வாளர் அனுராதாவிடம் மோனிகாஸ்ரீ  பணம் கொடுக்கும் பொழுது நேற்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் லஞ்ச வழக்கில் கைதான காரணத்தினால் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com