புதுக்கோட்டை: குடித்துவிட்டு வந்த கணவனை கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
மதுபோதையில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கும்பளாங்குண்டு சுனையக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேகர் (39). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கு அமிர்தவல்லி (19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடிந்ததில் இருந்து வேலைக்குச் செல்லாத சேகர், தினமும் குடித்து விட்டு வீடு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சேகருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாயே என்று மனைவி திட்டிய நிலையில் ஆத்திரமடைந்த சேகர் வீட்டில் வைத்திருந்த மண்ணெணையை அமிர்தவல்லி மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அமிர்தவல்லி அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த சேகரை அறந்தாங்கி காவல்நிலையம் அழைத்துவந்தார்.
தொடர்ந்து சேகரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அமிர்தவல்லி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். கணவனே புது மனைவியை தீவைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.