புதுக்கோட்டை: குடும்பப் பிரச்னையில் மாமனாரை சுட்டுக் கொலை செய்த மருமகன்

புதுக்கோட்டை: குடும்பப் பிரச்னையில் மாமனாரை சுட்டுக் கொலை செய்த மருமகன்
புதுக்கோட்டை: குடும்பப் பிரச்னையில் மாமனாரை சுட்டுக் கொலை செய்த மருமகன்

கந்தர்வக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மாமனாரை, மருமகன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராஜ். இவரது மகள் லதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் (52) ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி லதா மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் தற்போது தந்தை சைவராஜ் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கும் அவரது மாமனார் செல்வராஜுக்கும் குடும்பப் பிரச்னை மற்றும் சொத்துப் பிரச்னையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் ரவிச்சந்திரன் லதா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்துள்ளது. அப்போது அவரது இரு பெண் குழந்தைகளும் மனைவி லதாவின் பராமரிப்பில் இருக்க நீதிபதி உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து ஊருக்கு வந்த ரவிச்சந்திரன், ஆத்திரத்தில் தனது மாமனார் சைவராஜை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற அவரது மைத்துனர் முருகேசனையும் ரவிச்சந்திரன் துப்பாக்கி கட்டையால் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று ரவிச்சந்திரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த துப்பாக்கிக்கு வருகின்ற 2024 ஆம் ஆண்டு வரை உரிமம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடுகப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், மாமனார் சைவராஜுக்கும் மருமகன் ரவிச்சந்திரனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருப்பதால் மருமகன் ரவிச்சந்திரனிடம் உள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யாததால் தான்இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை இருந்ததால் அசம்பாவிம் ஏதும் நடக்கலாம் என கடந்த மாதம் 30 ஆம் தேதியே ரவிச்சந்திரன் வைத்திருந்த துப்பாக்கிக்கான உரிமத்தை ரத்து செய்யுமாறு கந்தர்வகோட்டை போலீசார், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ததாகவும், போலீசார் பரிந்துரை செய்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com