புதுக்கோட்டை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது
அன்னவாசல் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் விஷ்வா (22) என்ற இளைஞர் காதலிப்பதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த இளைஞரை பலமுறை எச்சரித்துள்ளனர். இதனை ஏற்காத அந்த இளைஞர் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் விஷ்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.