புதுக்கோட்டை: அரிவாளை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சவுரியார்பட்டி பிரிவு சாலை, விராலிப்பட்டி செல்லும் பிரிவு சாலை, ஆதனக்கோட்டை காவல் சரக்கத்திற்கு உட்பட்ட வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் சாலை ஆகிய பகுதிகளில் ஜோதி பாஸ்கர், முருகேசன், மகாலிங்கம் ஆகியோரிடம் நேற்று ஒரே நாளில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் கந்தர்வக்கோட்டை மற்றும் ஆதனக்கோட்டையில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை ஒன்றை அமைத்தார்.
அதன் அடிப்படையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், ராமச்சந்திரன், அறிவழகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் பாராட்டுகளை தெரிவித்தார்.