ஊருக்கு அரசு மருத்துவர் ஆனால் உண்மையில் நூதன திருடன்!
புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தி பணம் கொள்ளையடித்ததாக அரசு மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி காவல்துறைக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பிறர் வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்படுவது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி 4 நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நூதன திருட்டிற்கு பயன்படுத்திய ஸ்வைப் மிஷின்கள், ஸ்கிம்மர், கணினி, போலி ஏஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி கிருமாம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமணையில் ஒப்பந்த மருத்துவராகப் பணி புரிந்து வரும் விவேக் என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 4 இலட்ச ரொக்க பணத்தினையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் விவேக்கிடம் விசாரனை மேற்கொண்டதில், மற்றவர் வங்கி கணக்கிலிருந்து திருடப்படும் பணம் நேரடியாக தன்னுடைய கணக்கிற்கு வந்தவுடன் திருடப்பட்ட பணத்தில் 30 சதவிகிதத்தினை தனக்கு அளிப்பார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் சென்னையை சார்ந்த ராஜேஷ் என்பவருக்கு உதவியாக விவேக் செயல்பட்டதாகவும், இதில் புதுச்சேரியை சார்ந்த அதிமுக பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.