தொழிற்சாலைகள் போல் ஆழ்துளை கிணறுகள்.. மதுரையில் அரங்கேறும் தண்ணீர் வியாபாரம்!

தொழிற்சாலைகள் போல் ஆழ்துளை கிணறுகள்.. மதுரையில் அரங்கேறும் தண்ணீர் வியாபாரம்!
தொழிற்சாலைகள் போல் ஆழ்துளை கிணறுகள்.. மதுரையில் அரங்கேறும் தண்ணீர் வியாபாரம்!

தொழிற்சாலைகள் போல் ஆழ்துளை கிணறுகளை தனியார் நிலத்தில் அமைத்து நிலத்தடி நீர் வணிக ரீதியாக எடுத்து விற்கப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 28 லட்சம். நகர்ப்புறத்தில் மட்டும் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். குடிநீர் இணைப்புகளைப் பொறுத்தவரை வீடுகள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் என, மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு வரை 72 வார்டுகள் மட்டுமே இருந்த நிலையில், பின்னர் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு மேலும் 28 வார்டுகள் உருவாக்கப்பட்டன. தற்போது மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.

வைகை அணையிலிருந்து 115 எம்எல்டியும், ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக 30 எம்எல்டியும், காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 10 எம்எல்டியும் என, மொத்தம் 155 எம்எல்டி பெறப்பட்டு நபர் ஒருவருக்கு சராசரியாக நாளொன்றுக்கு 100 லிட்டர் குடிநீர் மதுரை மாநகராட்சியின் மூலமாக விநியோகிக்கப்பட்டுவருகிறது. கோடைகாலத்தில் நூறு வார்டுகளுக்கு மாநகராட்சியால் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், கோச்சடை, பரவை, கருப்பாயூரணி, உச்சம் பரமேடு, செல்லூர் விளாங்குடி , விரகனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் நிலத்திலிருந்து தொழிற்சாலைகள் போல் பல இடங்களில் உரிய அனுமதி இன்றி ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த விவசாய கிணறுகளில் இருந்தும் லாரிகளிலும் வேன்களிலும், 150 ரூபாய்க்கு 25 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட லாரியில் தண்ணீர் எடுக்கப்பட்டு அவை சுமார் 1600 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வணிக ரீதியாக விற்கப்படுகிறது. இதே போல் நாள் ஒன்றுக்கு மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டும் 500க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் 24 மணி நேரமும் தண்ணீரை வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள், முறைகேடான தண்ணீர் சுரண்டல் என பல்வேறு சிக்கல்களை மதுரை மாநகராட்சி நிர்வாகம் கருத்தில் கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்ட விரோதமாக அனுமதி இன்றி ஆழ்துளை கிணறு அமைத்து நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு வீடுகள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் விலைக்கு குடிநீரை விற்பனை செய்து வருகிறார்கள்.

சட்ட விரோதமாக எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சித் கலோன் தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது,

”தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுவதற்கு மாநகராட்சி சார்பாக யாருக்கும் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளனர் மேலும், ”வருவாய்த்துறை சார்பாக ஏதேனும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்படும்” என தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரை கோட்டாட்சியர் சுசி பரிமளா அவர்களை தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது,

”வருவாய் துறை சார்பாக ஆழ்துளை கிணறு அமைத்து வணிக ரீதியாக தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவாய் துறை சார்பாக யாருக்கும் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com